திங்கள், 28 ஏப்ரல், 2008

நீ என் நிலவொளி.

இன்னும் எத்தனை திங்கள் நான்
காத்திருக்கவேண்டும்...
இன்றுவரை உன் மெளனம்...போல்
இதுநாள் வரை நான் சந்தித்ததேயில்லை...

கரைக்கு யார்கொடுத்த வரம்..
கடலலையின் கண்ணீர் நுரையை..
தாங்கும் சக்தி...

யாருமிருந்தால் சொல்..
என் கண்ணீர் மட்டுமல்ல..
மனம் கொண்ட கவலைகளையும் தள்ளிவிட்டு..
மீண்டும் என்னை நானே சமாதானப்படுத்திக்கொள்ள..

வேண்டாத ஆசைகளை தீயிட்டு கொளுத்திட
நினைத்தபோதெல்லாம்....
மழையாய் உன் நினைவுகள் வந்து..
மறுபடியும்..மறுபடியும் உன்னையே நேசிக்கவைக்கிறதே...

என்றாவது ஒருநாள்..
உன் நிலவொளியும் என் வீட்டு யன்னலில்
பட்டுத்தெறிக்கும்..
அதுவரை நினைவுகளைச் சுமந்து...
கனவுகளை மட்டும் வளர்கிறேன்.


வெள்ளி, 25 ஏப்ரல், 2008

தேடும் கண்பார்வை..

எத்தனை ஆயிரக்கணக்கான மக்கள்...
அத்தனை கண்களும் மாறிமாறிப்போகும் பூப்பந்தின் மீது...
அவரவர் மனதினில் போராட்டம்..
எந்த அணி வெல்லும் என்பதில் சந்தேகம்...

என் பூவிழியும் பந்துபோல் மாறிமாறி உருள்கிறது..
நீ வரும் வழிநோக்கி...
என்னதான் வெற்றி ஒருஅணிக்கு கிடைத்தாலும்...
நீ வராததால் தோல்விகளை மொத்தமாக வாங்கிக்கொண்டு....
உள்ளத்தில் வேதனையும் உதட்டில்வெறும் புன்னகை

மட்டும்...விளையாட்டையே வாழ்க்கையாகக் கொண்டிருந்தேன்..
விதி என் வாழ்க்கையை விளையாட்டாக்கிவிட்டதே..
தோல்வியும் வெற்றியும் விளையாட்டுக்கு மட்டுமல்ல...
வாழ்க்கைக்கும் சேர்த்துதான்...வெறும் சமாதானத்தோடு களம் இறங்கிசெல்லுகிறேன் நான்.
.............................
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

வாழும் மனிதா..

ஓ..மனிதா
வாழ்க்கைப் படகினில்

நீயும் வாழ
கடலைப்போல் நல்ல..

பரந்த உள்ளம் தேவை..

அடுத்தவரை நம்பி வாழாதே
உள்ளத்தில் தூய்மையும்

உண்மையான உழைப்பும்
உன்னிடத்தில் உயர்திருந்தால்

கடல் வற்றியும் _அலையோடு
போகாத படகிற்கு_ கயிறு
துணை நின்றது போல்
நாளைய வாழ்வில்


துன்பம் வந்து வாட்டினாலும்
உன் உள்ளமெனும் கோவிலில்
கவலைகளின்றி

நம்பிக்கை எனும் நூல்
வழிகாட்டியாகஅமையும்.

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி



ஞாயிறு, 6 ஏப்ரல், 2008

வலம் வரும் நினைவுகள்...



கடலைகள் ஒரு முறை அவை

தரையைத்தொடும் அழகை நிறுத்தக்கூடும்...

வெய்யில் மழையில் வரும் வானவில்லும் அவை

நிறங்களை மாற்றி தரக்கூடும்..


இரவினில் வலம் வரும்..நிலவுகூட அது

தன்னையே மறந்து வராமலே விடக்கூடும்..

மடியினில் உறங்கும் குழந்தைகூட அது
உறங்காமலே விழித்திருக்கக்கூடும்....

கொடிதனில் ஆடும் சிறு இலைகள்கூட அவை..
அப்படியே ஆடாது நிறுத்தக்கூடும்..

காய் தரும் பழம் கூட அது

காய்க்காமலே போகக்கூடும்...


வரும் மழை கண்டு தோகை விரித்தாடும் மயில்கூட

அதுதோகைவிரிக்காது முடங்கிப்படுத்துறங்கக்கூடும்..

தரும் தென்றல் சுவாசத்தில் மலர்கள் ஒருதடவை...அவை

இதழ்கள் விரிக்காது மெளனமாய் மொட்டுக்களாகக்கூடும்...


சுடும் வெப்பம் கூட அது

தரும் குளிராகமாறிவிடக்கூடும்..

தொடர் தரும் இடர்கூட இன்றேஅவை

துயரின்றி வரும் நிலைவரக்கூடும்..


தரும் உன் நினைவின் நினைவுகள் அவை

மாறாது வரும் தினம் வலம்வரும் மெய் உருகும் நிலைவரையும்.

வெறும் எழுத்துக்களால் கோர்த்திட்டதால்..அவை

அழியும் நிலை வரும்...அழியாது தினம் தரும் நினைவுகள் மனதில்வலம்வரும்.

புதன், 2 ஏப்ரல், 2008

சுகமான சுமைகள்.



முகமறியா முகவரியே

முதற்கண் வணக்கம்

உனைத் தெரியாத

எனக்கேன் அறிமுகம்


அண்ணனா, தம்பியா

அக்காவா, தங்கையா

உறவுக்காரனா, நண்பனா

யாரானாலும் யார் நீ


என்னிலை அறிந்து

எனக்கேன் அனுப்புகிறாய்

வாழ்த்துக்கள் கையில்

கிடைத்தபோது மகிழ்ச்சி


வருகின்ற நூல்கள்

சிறு சிறு கதைகள்

எல்லாமே நன்றாகவே

நாகரீகமாகவே உள்ளதே


பக்கங்களை புரட்ட

மனப் பக்குவம் இல்லையே

தொடர் கதையாய் நீயும்

சிறு கதைதான் நானும்


எனக்காக நீ அனுப்பியநூல்களால்

உனக்காகநூல்நிலையம் திறக்கலாம்

மறைக்காமல் சொல்லிவிடு

சொந்தம் என்ன எமக்குள்

சொல்லி விட்டு அனுப்பிவிடு


தயங்காதே தழிழரே

தந்திடுவாய் உன்நாமத்தை

அறிய ஆவல் தான்

பார்க்க ஆசைதான்


ஆசையால் நீ அனுப்பியதுபோதும் போதும்

உன் வாழ்த்துமடல்கள்

வாழ்க்கையில் மறக்கமாட்டேன்

சுகமான உன் ஊடல்கள்

சுமையான என்தேடல்களாயிற்று


.--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி

அழியா நினைவுகள்



மார்கழியில் வந்த வானவில் தான் நீயும்

வந்த அடையாலம் தெரியாமல் போனாயோ...

என் அன்பால் குறையேதும் கண்டாயோ

கண்டிருந்தால் கனவிலும் எனை நினைக்காதே


நான் பிறந்த நாளை மறந்திருக்க

மறவாமல் வந்து அம்மணிக்கு வாழ்த்துவாழ்த்தியதை

நெஞ்சம் தான் மறக்குமா.

நெஞ்சம் உன்னோடு தான் தஞ்சம் என்று அறிவாயா


அறியாமல் எனை அறியாமல் ஆசை வைத்தேன்

தெரியாமல் யாருக்கம் தெரியாமல் அன்பை வளர்த்தேன்

புரியாமல் விடை தெரியாமல் காலத்தை கழித்தேன்

அறிந்தும் அறியாமல் செய்த குற்றத்தை நினைத்து நொந்தேன்


தெரிந்தும் என்னை மன்னித்து ஏற்றுக்கொண்ட புலவர் நீ

வருந்தி நானும் மனம்திருந்தி வருகையில்

பிரிந்துநீயும் போவது மனம் தான் தாங்குமா

தாங்கும் சக்தி உனக்கிருந்தால் எனக்கும் தந்துவிடு


தாங்கும் என் மனமும் தாங்கும்.

தங்கும்உன் நினைவுகளை அழித்து விட்டு

என் மனம்பிரியா என்னவரின் நினைவுகளோடு

என்றும் மனதினில் நிலையாய் வாழ்ந்திடுவேன்

--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி

திருமணம்.



மனம் இரண்டு, இணைந்தால் திருமணம்

மனம் வறண்டு வாழ்ந்தால் ஒரு மனம்

குணம் கொண்ட வாழ்வது சில மனம்

பணம் கொண்ட வாழ்கையில் பல மனம்,


தினம் வாழ்வதில் போராட்டம்

பணம் குவிப்பதில் தேரோட்டம்

சினம் கொண்ட வாழ்கையில் திண்டாட்டம்

மனம் கூடுகின்ற வாழ்கையில் கொண்டாட்டம்


இருமனம் திரு மணமாகி

திருமணம் ஒரு மனமாகி

விரு வென்று நாட்கள் தாவி

கரு என்ற கர்ப்பம் நிரப்பி


பல பேர் வாழ்வது தேன் அமுதம்

சில பேர் வாழ்வது வீண் பாரதம்

பல பேர் வாழ்வது கண்ணீர் நீரோட்டம்

சில பேர் வாழ்வது பன்னீர் குளிரோட்டம்


வாழ்கையிது நாம் வாழத்தான்

வாழும் வரை நாம் போராடத்தான்

காலமும் ஒரு நாள் கைகூடும்

காத்திருக்கும் நாளும் ஒரு நாள் திரு நாளாகும்..

--------------------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி

மறந்தாலும்....



மறந்தாலும்....

உன்னை நீ...

மறந்தாலும் பறவாயில்லை...

என்னுள் இருக்கிறாய்...

என்றும் பத்திரமாய்...

விவாகரத்துப் பத்திரமாய்...

விடை தெரியாத வினாக்களாய்.

நீ வருவாய் என...



அன்பைக் கூட்டித்தந்து...

அறிவைப் பெருக்கிதந்து...

கசப்பான நினைவுகளை கழிக்கக்கற்றுத்தந்து...

நன்மை தீமையை பிரிக்கக் காட்டித்தந்து...


இன்று உன் அன்புக்காகஏங்கவைத்து...

அறிவை உன்னோடு மட்டும்அடகு வைத்து...

உன் நினைவுகளை மட்டும்..

கழிக்காது வளர்த்து..

உன்னையும் என்னையும்..

இன்று வரை பிரிக்காதுகாத்து நின்று...


இன்றும் வருவாய் என..

தண்ணீரில் அழும் மீனாகயாருக்கும் புரியாமல்..

கண்ணீர் விடுவதும்...

கண்ணீர் விடுவதை அறியாது...


இரை கிடைத்ததாய்..

காலைச்சுற்றும் மீனாக...

இல்லாத ஒன்றுக்காய்..

பொல்லாத நினைவுகளை சேர்த்து வைத்து

கவலையில்முகம் புதைக்கிறேன்...

நீ வருவாய் என...


--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி

இதுதான் காதலா...?



கண்களால் காணவில்லை...

வாய் மொழி வார்த்தை பேசவில்லை...

காதுகளினால் உன் குரல் கேட்கவில்லை...

உருவமும் கண்டதில்லை...


உள்ளத்தில் மட்டும் உன் நினைப்பு...

இதுதான் காதலா...?


எங்கோ....யாரோ...

என்னவோ கூறுகிறார்..?


அவனு(ளு)க்கும் அப்படியிருந்தால்...

அதுவும் காதல்தான்...

இல்லையேல் ஒருதலைக்காதல்...

நீரில் வரைந்த காதல் இதயவரைபடம் போல்....

வந்த தடயம் இல்லாமல் மறைந்தே சென்று விடும்.

செவ்வாய், 1 ஏப்ரல், 2008

ஆசையில் ஓர் கடிதம்.




அந்நிய தேசம் வந்து..

அகதியென முத்திரை குத்தி...

அயராது உழைத்து...

அவதிப்படும் வாழ்வை...

அழகாக மடல்மூலம் எழுதி அனுப்பு என்றாய்...


வாரம் ஒரு தடவை போனில்பேசினாலும்...

என் அத்தான் அன்பு மடல்..

இது வன்றோ என....


படுக்கையிலும் படிப்பதற்கு என்...

உண்மை நிலையை..

எழுத்தில் எழுதச்சொல்லுகிறாய்...


எதை எழுத...?


மடல் உன் கைக்கு வர..

என் கண்மடல் திறந்து...

மழை நீராய் வரும்...

கண்ணீர் கதைகள் எழுதவா..?


ராத்திரியில் தூக்கம் கெட்டு....

அலுவலகம் கூட்டித் துடைத்து..

குப்பை அள்ளி தூக்கிப்போட்டு...

நிலங்களை மெசின் பிடித்து....

தோள் வலிக்கிறதே என்று அம்மா..

என அலறும் கதை எழுதவா...?


பல இலட்சங்கள் கடன் பெற்று...

ஏஜென்சி மூலம் கனடா வந்து...

வந்த கடன் வட்டியோடடைக்க...

பகலும் ஒரு சாப்பாட்டுக்கடையில்...

படாத பாடு பாத்திரங்களோடு.....


பட்ட துன்பம் எழுத்தில் எழுதவா...?


அடுப்பால் இறக்கிய அண்டா அவசரமாகத்தேவை...

உடனே கழுவித்தா என்ற படியால்...

அவசரமாக கைப்பிடிகளைத் பிடித்து...

என் கைகள் சுட்டு வெந்து அம்மா எனத்துடித்து.....

தூக்கிய சட்டியை கீழே போட்டதிற்கு...

வேண்டிய பேச்சை எழுதவா...?


எதை எழுதி நீ சந்தோசமாகப்படிப்பாய்...

சொல் என் அன்பே...

இருக்கும் விடுமுறையிலும் கிடைக்குமா..

வேலை எங்காவது என்று...

வேதனைப்படும் வாழ்க்கை நிலை...எழுதவா...?


கோடைக் காலம் ஆரம்பமானால்...

விளையாட்டு மைதானங்களில்..

புல்லு வெட்டமெஷின் பிடிக்க...

கூப்பிடுவார்கள் என்ற நினைப்பில்...

என் மனதில் மாரிக்காலம் ஆரம்பமாகும்..

வறுமையை..கோடு போட்டு எழுதவா...?


நான்கு மணிநேரம் மட்டும் தூங்கி...

இரவினில் வேலையிடத்தினில்காணும்..

படிகளில் மீதி தூக்கம் போட்டு...திடுக்கிட்டு எழுந்து.. அவசரவசரமாக...பெரியவர்கள் வரமுதல் நிலம் துடைத்து காய விட..

நான் படும் அவதி நிலையை..

மனம்கதிகலங்கும் நிலையை எழுதவா...?

வேண்டாம் செல்லம்...இவையாவுமே உனக்கு வேண்டாம்...


போரின் பிடிக்குள் வாழ்ந்தாலும்...

ஒரு பிடி சோறாவது நின்மதியாய்...

உண்டு....உன்னோடும், அம்மா, அப்பா, தங்கை, தம்பி...என்று வாழ்ந்து வந்த..அந்தநினைவுகளே தினம்..

என் ஆறுதல்களம்மா....


ம்.....இதுவரையில் வாசல் வரைவந்த என் கண்ணீர் மடல் தாண்டி..

இம் மடலையும் கழுவுகிறது...

படித்துப்பார்.....உன்னோடு மட்டும்....

பிடித்து வைத்துக்கொள்...

என் அன்னை அறிந்தால் தாங்கமாட்டார்...


விடைபெறுகிறேன்......

நலமாகவுள்ளேன்..என்ற பொய்யைக் கூறிக்கொண்டு.


--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி