சனி, 24 ஜனவரி, 2009

மணம் மாறாத தமிழ்



கனடா மண்ணால் உருவாக்கப்பட்ட சாடி..
பசளை போட்ட கனடா மண்..
சுத்திகரிக்கப்பட்ட கனடா தண்ணீர்.
ஒளித் தொகுப்புக்கு ஏற்ற கனடா வளி..

இத்தனையும் கொடுத்து..
தாயகத்து கருவேப்பிலையை..
தரமாக பாதுகாத்தேன்..
மாறாத அதே மணம்..

அதுபோல் வாழ்வது கனடாவாகயிருந்தாலும்..
எம்முள் வாழ்வது தமிழ்..
அது கடல் கடந்து வந்தாலும்..
இன்னும் உலகெங்கும் மணம் பரப்பிக்கொண்டிருக்கிறது.


வாழிய தமிழ்! வாழிய! வாழியவே!!
--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=9999

வெள்ளி, 16 ஜனவரி, 2009

உன் அன்பினில் நானும்



நீ தந்த அன்பினில் நான் மகிழ்ந்தேன்..
நீ செய்த குறும்பினில் என்னை நான் இழந்தேன்..
நீ வந்த பாதைதனில் நானும் நடந்தேன்..
நீ தந்த பாசத்தினில் நானும் வளர்ந்தேன்..

மாலை பொழுதினில் உன் மடியில் நானுறங்க..
சேலை தலைப்பினில் என்னுடல் தான் மறைக்க..
காலைப் பொழுதனில் உன்முகம் பார்த்திருக்க..
சாலை யோரம்தனில் உன்கரம் சேர்த்திருக்க..

அன்புடன் நீ ஊட்டிய உணவினிலே..
பண்புடன் நீ காட்டிய பரிவினிலே..
இன்பமுடன் நீ காட்டிய வழியினிலே..
அன்புடன் நாமும் வாழ்கையிலே..

விதி என்று ஒன்று எம் வாழ்விலே..
சதியோடு உறவாடி சாடி நின்றது தண்ணீரிலே..
மதிகூட தோற்றது சுனாமி உன் வரவாலே..
நின்மதி போனதே என் தாயே உன் இறப்பாலே..

இறைவா என்னையும்உன் பக்கம் அழைத்திடு..
என் தாய் முகம் பார்த்திட
அவர் அன்பினில் நானும் மகிழ்ந்திட
இறைவா என்னையும் அழைத்திடு.

திங்கள், 12 ஜனவரி, 2009

முள்ளில் விழுந்த முதியோர்.

காலம் மாறித்தான் போய்விட்டது..
கண்ணீரும் கவலையும் மிச்சமாகிவிட்டது..

ஆசையாய் பெற்று வளர்த்து
ஆராரோ பாடி அரவணைத்து

பாலர் பாடசாலையில்
பக்குவமாய்ச் சேர்த்து..

நீ அழும் போதெல்லாம்
ஒளித்திருந்து பார்த்து
எத்தனை நாள் நானும் அழுதிருப்பேன்...

ம்...

இப்போது நீயும்
அதைத்தான் செய்கிறாய்..
என்னை இங்கே விட்டுவிட்டு...
திரும்பியும் பார்க்காமல்
ஓடியே போய் விட்டாய்..

நான் அழுகிறேன்..
இங்கு வந்ததிற்காக இல்லை..

உன்னை மறுபடியும்
எனி எப்போது காண்பேன் என்ற ஆவலில்..
நான் அழுகின்றேன்..

வருடத்திற்கு ஒரு முறை போடும்
தடுப்பூசி போல
வருடத்தில் ஒரு முறை வரும்
மாதர் நாளிற்கு மட்டும்
மறக்காமல் வருகிறாய்..

இப்போது தான் புரிகிறது..
அந்த நாள் ஏன்
வருடத்தில் ஒரு நாள் மட்டும் என்று..

நீ சின்ன பிள்ளையாகயிருக்கும் போது
நீ விரும்பும் அம்புலி மாமா பாட்டும்,
பாபா பிளக் ஷீப் பாட்டும்..
உனக்காக நான் சலிக்காமல் பல தடவை
பாடுவேன்..

இப்போது நான் சின்னப்பிள்ளை..
உன்னை கைத்தாங்கலாகப் பிடித்து
மெல்ல மெல்ல அடி வைத்து..
உன் தயவால் வாழ ஆசைப்படுகின்றேன்..

ஆசைப்பட்டு என்ன பலன்..
என் தயவு இருக்கும் போது
உன்னை மனிதனாக்கிவிட்டேன்..

இனி உனக்கு நான் தேவையில்லை என்ற போது..
நான் ஆசைப்பட்டு என்ன பலன்..?

ஒரு வார்த்தையை நீ
திரும்பத் திரும்ப பேசிய போது
ஆசையாய் ஆனந்தமாய்க் கேட்பேன்...

இப்போது நான் எப்ப வருவாய் எப்ப வருவாய்
என்று ஆசையாய் கேட்க..
ஒரு தடவை சொன்னால் புரியாதா என
எரிச்சலடைகிறாய்..


நாளை நான் உயிரோடு
இல்லை என்றால்..

நீ அறிந்து வந்தால்..
முள்ளில் பட்ட என் இருதயத்தை
மலர்களால் அலங்கரிக்க வேண்டாம்..
இருக்கும் இடத்தை துடைத்துவிட்டுப் போ...
நாளை உனக்கான இருப்பிடம் இது.
--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

ஞாயிறு, 11 ஜனவரி, 2009

மதி தரும் நதி.


நிலவு உருமாறி
நீர் தரும் பெண்ணாகி
நீரில் பிரதிபலிக்கும் அழகே..

நீயிங்கு வந்ததால்..
நீந்துகின்ற விண்மீன்களும்...
நீளுகின்ற இரவொன்றில்..
நிசப்தமாய் கண்ணிமைக்க..

நீல மேகங்களும்
நீல மயில் உன்னைக் கண்டு
நீரில் கோலமிட..

நீ தொட்டதால்..
நீர் கூட அட்சய பாத்திரமாய்..
நீர் வற்றாத நீண்ட ஆயுளைப் பெற...


நித்தம் உன் வருகை காண..
நின்மதியின்றி தவமிருந்த
நிசாரியும்(சூரியன்) வெட்கத்தால்
நீல மேகத்தினுள் முகம் புதைத்துக்கொண்டானோ..

நின் முகம் காணாது..
நிம்மதியின்றி தவித்தது கண்டு..
நீயும் கண்ணிமைக்கும் நேரத்தில் காட்சி தந்தாயோ..

நித்தம் உன் வருகை காண..
நீண்ட ஆயுளை நீயும் பெற..
நீங்காத நினைவுகளால்
நின் மலர் வதனம் பார்த்து காத்திருப்பேன்.

--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=9912

வெள்ளி, 9 ஜனவரி, 2009

உங்களுக்குப் புரிகின்றதா..?



ஆலயத்திற்குச் செல்லும் போது...
அஸ்லாமு அழைக்கும் என்று..
எதிர் கொள்ளும் நண்பனைப்பார்த்தேன்..
அழைக்கும் சலாம் வணக்கம் என்றான்..

அப்போது மணி பன்னிரண்டு...
பள்ளி வாசலில் இருந்து வந்த..
எனக்குப்புரியாத புனித வார்த்தைகளைக்கேட்டு...
இரு காதுகளிலும் தொட்டு ஏதோ நினைத்துக்கொண்டான்..

ம்...

ஆலய மணியோசை கேட்டால்..
நாமும் குட்டிக்கும்பிடுவது போல்..
புரியாத மொழியில் வரும்
வார்தைகளின் அர்த்தம் புரிகிறதா எனக்கேட்டேன்..

கட்டாயமாக தெரிந்து வைத்திருக்க வேண்டியது
ஒவ்வொரு இஸ்லாமியரின் கடமை என்றான்..
நல்லது....நமக்கும் நேரமாகிறது விடைபெற்றேன்..
அழகான பூக்களைப் பிய்த்து மந்திரம் சொல்லி எறிகிறார்..


எந்தச் சொல்லுக்கும் அர்த்தம் எனக்குப் புரியவில்லை..
என் மனம் சொல்லும் வேண்டுதல்களை சுவாமியின்..
கா(க)ல் அடியில் இறக்கிவைக்கிறேன்..
உங்களுக்குப் புரிகின்றதா எனக் கேட்டுக்கொண்டு.

--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி.


http://www.thamilworld.com/forum/index.php?showtopic=9873

வெள்ளி, 2 ஜனவரி, 2009

ஓராண்டு நிறைவு



முடிவடைந்த 2008
தந்துவிட்ட சோகம்..
வந்து விட்ட 2009 ல்
ஓராண்டு நிறைவு பெற்றது..


இவ்வாண்டை வரவேற்க..
இப்புவியில் என்னை வரவேற்ற..
இவ்வுலகை விட்டுச்சென்ற..
இதயம் முழுதும் நிறைந்த பிதாவின்


இனிமையான ஆண்டுபிறக்கும் போது..
அருமையான நற்குணங்கள் கூறுவார்..
அமைதியாகப் பேசக்கற்றுக்கொள்..
அதிகம் சிந்தித்துச் செயலாற்றிக்கொள்..

வரும் துன்பத்தை மனதார ஏற்றுக்கொள்..
தரும் சந்தோசத்தையும் அளவோடு மகிழ்ந்துகொள்..
பாடசாலைப்படிப்பை நிறுத்திக் கொண்டாலும்..
வாழ்க்கைப் பாடத்தை பாடமாக கற்றுக்கொள்..

பெற்றோரைப்போல் சகலரையும் மதிக்கக் கற்றுக்கொள்..
பெரும் பதவியில் இருந்தாலும் குணத்தால் மட்டும் உயர்ந்து கொள்..
பல உதவிகள் செய்தாலும் ஆயிரம் முட்டை போட்டு
அமைதியாகயிருக்கும் ஆமைபோல் அமைதியிருந்துகொள்...

ஒரு முட்டை போட்டுவிட்டு கொக்கரித்துக்கொண்டு..
பெருமையடிக்கும் சில மனிதர்களிடத்தில் அவதானமாகயிருந்துகொள்....
இருந்தாலும், இறந்தாலும் மரம் தரும் சுகம் போல்..
இருக்கும் போதே நல்லதையே நினைத்து நல்லதையே நினைத்துக்கொள்...


தோல்விக்கான காரணத்தை எண்ணி துவண்டுவிடாதே..
வெற்றியின் பாதைக்கான வழி தேடி துணிந்து கொள்..
அழும் துயரம் வரும்பேதெல்லாம்...
தொழுது மனப்பாரம் இறக்கிவைத்துக்கொள்.
ஆண்டவனேயன்றி அதைவிட ஆறுதல் வேறுயாருமில்லை.


அனைவருக்கும் என் ஐயாவின் வார்த்தைகள் பிரையோசனப்படட்டும்.
( என்னுடைய சொந்தக்கருத்துக்களும் சேர்த்துள்ளேன்..)
அவர் சார்பில் 2009 ஐ இனிதே வரவேற்போம்.

************************************************

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

www.thamilworld.com