திங்கள், 12 ஜனவரி, 2009

முள்ளில் விழுந்த முதியோர்.

காலம் மாறித்தான் போய்விட்டது..
கண்ணீரும் கவலையும் மிச்சமாகிவிட்டது..

ஆசையாய் பெற்று வளர்த்து
ஆராரோ பாடி அரவணைத்து

பாலர் பாடசாலையில்
பக்குவமாய்ச் சேர்த்து..

நீ அழும் போதெல்லாம்
ஒளித்திருந்து பார்த்து
எத்தனை நாள் நானும் அழுதிருப்பேன்...

ம்...

இப்போது நீயும்
அதைத்தான் செய்கிறாய்..
என்னை இங்கே விட்டுவிட்டு...
திரும்பியும் பார்க்காமல்
ஓடியே போய் விட்டாய்..

நான் அழுகிறேன்..
இங்கு வந்ததிற்காக இல்லை..

உன்னை மறுபடியும்
எனி எப்போது காண்பேன் என்ற ஆவலில்..
நான் அழுகின்றேன்..

வருடத்திற்கு ஒரு முறை போடும்
தடுப்பூசி போல
வருடத்தில் ஒரு முறை வரும்
மாதர் நாளிற்கு மட்டும்
மறக்காமல் வருகிறாய்..

இப்போது தான் புரிகிறது..
அந்த நாள் ஏன்
வருடத்தில் ஒரு நாள் மட்டும் என்று..

நீ சின்ன பிள்ளையாகயிருக்கும் போது
நீ விரும்பும் அம்புலி மாமா பாட்டும்,
பாபா பிளக் ஷீப் பாட்டும்..
உனக்காக நான் சலிக்காமல் பல தடவை
பாடுவேன்..

இப்போது நான் சின்னப்பிள்ளை..
உன்னை கைத்தாங்கலாகப் பிடித்து
மெல்ல மெல்ல அடி வைத்து..
உன் தயவால் வாழ ஆசைப்படுகின்றேன்..

ஆசைப்பட்டு என்ன பலன்..
என் தயவு இருக்கும் போது
உன்னை மனிதனாக்கிவிட்டேன்..

இனி உனக்கு நான் தேவையில்லை என்ற போது..
நான் ஆசைப்பட்டு என்ன பலன்..?

ஒரு வார்த்தையை நீ
திரும்பத் திரும்ப பேசிய போது
ஆசையாய் ஆனந்தமாய்க் கேட்பேன்...

இப்போது நான் எப்ப வருவாய் எப்ப வருவாய்
என்று ஆசையாய் கேட்க..
ஒரு தடவை சொன்னால் புரியாதா என
எரிச்சலடைகிறாய்..


நாளை நான் உயிரோடு
இல்லை என்றால்..

நீ அறிந்து வந்தால்..
முள்ளில் பட்ட என் இருதயத்தை
மலர்களால் அலங்கரிக்க வேண்டாம்..
இருக்கும் இடத்தை துடைத்துவிட்டுப் போ...
நாளை உனக்கான இருப்பிடம் இது.
--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி