புதன், 25 நவம்பர், 2009

மீளாத சோகம்..


மீளாத சோகம்..எனக்குள்..
யாராலும் தீர்க்க முடியாத சோகம்..

பாசத்தோடு வளர்த்த பறவையை
பருந்து ஒன்று வந்து கொத்திக்
கொ(ன்று)ண்டு போனதே..

ஆசையோடு கட்டிய மணல் வீடு.
அலை வந்து சிதைத்து விட்டதே..

பக்கம் பக்கம் பார்த்து ஒட்டிய பட்டம்..
பனை மரத்தில் சிக்கித் தவித்துக் கொண்டதே..

மூச்சுப் பிடித்து ஊதி ஊதி பெரிசாக்கிய
பலூனும் உடைந்து போனதே...

மழை பெய்த வெள்ளத்தில்
நான் விட்ட காகிதக் கப்பல்
கரை சேராமல் தாண்டு போனதே..

இன்று நினைத்தாலும் மீளாத சோகம் எனக்கு..
யாராலும் தீர்க்கமுடியாத சோகம்..

நிலவே கலங்காதே..




ஓ....நிலவே
நீயும் அழுகிறாய்...
கவிஞர்களுன்னை கவிவரிகளால்
கலங்கப்படுத்தி விட்டார்கள் என்றா..?

தேய்ந்து தேய்ந்து வளருகிறாய்..
என்றதால்...உன்னை..
வருத்தி வருத்தி அழுகிறாயா..?

நாடுகள் பலவற்றிலிருந்து வந்து..
தேடுதல் பலவாயிரம் செய்து..
உன்னை நாசமாக்கி படமெடுத்தார்களென்றா..?

துணையேதுமில்லாமல்..
தனித்து விடப்பட்டு..
மேகத்தின் ஆடைபட்டு..
விதவைபோல் காணப்படுகிறாய் என்றா..?

இத்தனை கேள்விகளை கேட்டு..
இன்னும் உன்னை அழவைக்கிறேன்..
உன் அழுகைக்கு நானும் ஒரு காரணம்..
மன்னித்துக்கொள் நிலவே...

படித்தேன் உன்னைப்பற்றியதோர் செய்தி..
நிலவிலும் நீர் உண்டாம்..

எழுந்தது எனக்குள்ளே பல கேள்வி..
அதனால் கேட்டேன்
பதில் கூறு...ஏனெனில் நானும் அழுகிறேன்..
விடையே இல்லாத கேள்விகளைக்கேட்டு..

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11638

அதி காலைப்பொழுதில்..




அதிகாலைப் பொழுதில் நடந்து பார்..
உன் காலடி ஓசையைத் தவிர..
எந்த ஓசையும்
உனக்கு கேட்காது..

கண்கள் காணும்
காட்சிகளை ரசித்துப் பார்..
கவலைகள் எதுவும் மனதில்
கிட்ட நெருங்காது..

புதிய நாளை இன்முகத்தோடு..
வரவேற்றுப் பார்..

காக்கை கூட உன் அருகில்
வந்து கவி பாடும்..
தாவிச் செல்லும் அணிலும்..
ஓடி வந்து உன் தோள் சாயும்..

படபடவென்று பட்சிகள்...
ஒன்றாகப் பறந்து..
இயற்கையை ரசிக்க..
நேர் வரிசையாகயிருந்து
மின் கம்பியில் ஊஞ்சலாடும்..

தத்தி தத்தி
சின்னக் குருவிகள்..
கொத்தி கொத்தி இரை தேடும்..

வீட்டைக் காக்கும் நாய் கூட..
வீதி வரைக்கும் வந்து..
வாலை ஆட்டி மகிழ்ந்துகொள்ளும்..

அதிகாலைத் தென்றல்..
உலா வரும் நேரம்.. மெல்லிய குளிரில்
உன் தேகம் நனைந்து
மனம் களிப்புறும்..

வீதிகளுக்கு விடைமுறை
கிடைத்தது போல்..
எந்த போக்குவரத்து சலனமுமில்லாமல்..
அமைதியாக உறக்கம் கொள்ளும்..

எங்கிருந்தோ வந்த பூனைக்குட்டிகள்..
கால்களை உள்ளே மடக்கி..
மெல்ல தலையைக்குனிந்து
ஒன்றையொன்று பார்த்து
புன்முறுவல் செய்யும்..

மெல்ல வீசும் காற்றில்..
காகிதச் சருகுகள்..
ஓடி ஓடி ஓய்ந்து கொள்ளும்..

புத்தம் புது மலர்கள்..
பனித்துளிகள் பட்டு..
முகம் கழுவிக்கொள்ளும்..

ஞாயிறு வருகை கண்டு..நாணத்தால்
திங்கள் மெல்ல தன் முகத்தை..
மேகத்துனுள் ஒளித்துக்கொள்ளும்..

ஒளிரும் நட்சத்திரங்கள்..
விடியும் பொழுதில்..
தம் போர்வைக்குள்..
முடங்கிக் கொள்ளும்..

அதிகாலைப் பொழுதில்
நடந்து பார்..
மனம் அமைதியாகயிருந்து....
புது ராகம் இசைக்கும்..

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11538