சனி, 27 செப்டம்பர், 2008

என் அருகில் ஓர் நிலா




இறக்கையடித்துப் பறக்கும்
பட்டுப்பூச்சி சத்தமின்றி
பூவிற்கு கொடுக்கும் முத்தம் போல்..

வட்ட நிலா அவன்
மெளனம் மட்டும் பேசும்
என்மனதோடு அமைதியாய் என்னாளும்..

கிட்ட வந்தான் ஒரு பொழுதில்
எட்டப்போகுமுன்
தொட்டுவிடத் துடித்தான்..

பட்டுப்போன்ற அவன் கரங்கள்
தொட்டவுடன் அன்று பெய்த
மழையில் நனைந்த பூவாய் ஆனேனே..

புருவம் ஒன்றை
தொட்டுக்கொண்டிருக்கும் அவன்கேசம்
எனக்கும் வளர்ந்தது அதுபோல் அவனில் நேசம்..

அதிகாலைச் சூரியன் இரண்டாய்
திரண்டு வந்தது போல்
ஒளிமிகுந்த அவன் பார்வையில்
நானும் ஒளிந்து கொண்டேனே...

அதிகம் உதிராத பூக்கள்
அவன் வார்த்தைகள்
அதனால்தான் என்னவோ
அதுவே அவன் தந்த கவிதைகள்..

கவிதைகள் எழுதவில்லை
காரணம் நான் கேட்கவில்லை
புரிந்து கொண்டேன் அவனே ஒரு கவிதை தானே..

உயரத்திலிருந்து வந்த நீர்வீழ்ச்சி
பரந்து விரிந்து பல பெயர்கள் கொள்வதுபோல்..
அவன் ஒருவனே பலகலைகளையும்
பக்குவமாய் அறிந்து ஆற்றல்கொண்டுள்ளானே..


கல்லூரித்தோழிகளோடு கற்பனையில்
உலகம் சுற்றி வந்ததுபோல்
அவனோடு அழகிய நினைவினில்
அடிக்கடி நானும் இனிய கற்பனையில்..

நிலாவைத்தேடி விண்ணுலகம் சென்றோர் பலர்..
நினைக்கவில்லை நானும்
நிலாவே என் அருகில் வந்தது போல் ஓர் சுகம்.

-----------------------------------------------------------
கொடுத்து வாழ்..
கெடுத்து வாழாதே..
நிலாவில் உலாவரும் "தனிமதி"
www.nilafm.com

திங்கள், 22 செப்டம்பர், 2008

யாருமில்லா ஊரில்..


சுதந்திரமில்லா நாட்டில்
வெட்டப்பட்ட மரம் ஒன்றில்
கூடிழந்து தவிக்கும் பறவை நான்..
வதிவிடம் தேடி வந்தவிடத்தில்
வார்த்தைகள் மெளனமாகி மனம் கதறுகின்றேன்...

ஓடி ஓடிச் சம்பாதித்தாலும்..
தேடி வரும் சொந்தம் எவருமின்றி
வாடிய பூவாய் மனம் வாடுகிறேன்..
புலம் பெயர்ந்து வந்த இடத்தில..

கூடி வாழ்ந்த வாழ்க்கை
கூதூகலித்த அந்நாட்கள்
ஓடி ஒளிந்து விளையாடிய பொழுதுகள்
ஒருவரை ஒருவர் அன்போடு
அரவணைத்த நிமிடங்கள்..

கோடி கொடுத்தாலும்
தேடித் திரும்ப வருமா அந்நாட்கள்..?

அதிகாலை காலை மாலை என
ஆலய மணி ஓசைகள்
வெள்ளை சீருடையில்
கள்ள மில்லா உள்ளங்கள்
பள்ளி செல்லும் காட்சிகள்..


படபடவென சிறகடித்துச்செல்லும் பட்சிகள்...
பட்டொளியாய் பறக்கும் சிறுவர்கள் கைகளில் பட்டங்கள்..
கூவிக் கூவிக் வியாபாரம் செய்யும் வியாபாரிகள்..
கூரை மேல் சேவல்
மதில் மேல் பூனை..
கூட்டுக்குள் கிளி..


காலைச் சுற்றும் நாய்..
கனிவாகப் பேச அயலவர்கள்..
ஓடி ஒளிந்து கொள்ள
அம்மாவின் முந்தானைச்சேலை..
தாவி தோளில் தொங்க அப்பாவின்
வைரமான தோள்கள்..

சிறுவயது ஞாபகங்கள்
பற்றிக் கொள்ள..

முழுநிலவு துணையோடு
பாட்டுக்குப்பாட்டும்
கேட்டுக்கொண்டு பாத்திரத்தில்
போட்டுக்கொண்ட இசையும்
தூறல் மழையில் நனைந்த சுகமும்..


இதயமாய் வீசிய தென்றல் காற்றும்..
இதயத்தை வருடும் மலர்களின் நறுமணமும்..
இதயததை விட்டு அகலாத நினைவுகளாய்
இறுதி வரை இன்பமாய் தொடருகின்றது
என் ஞாபகங்கள் யாருமில்லா இந்த ஊரில்.
__________________________________________
கொடுத்து வாழ். கெடுத்து வாழாதே..
நிலாவில் உலா வரும் தனிமதி.

www.nilafm.com