புதன், 25 ஜூன், 2008

மெளனம் கலைவதெப்போ...?




மெல்ல விடியும் பொழுதில்..
காலைக்கதிரவன் கரங்கள் நீட்டி காத்திருக்க..

நீண்ட இரவைக்கழித்து மீண்டும்
உன்னருகே புள்ளி மான்கள் பார்த்திருக்க..

கெண்டை மீன்கள் உன் உடல்...
மெல்லத் தீண்டி சிரித்து மகிழ்ந்திருக்க..

உன் வரவு கண்டு அதிகாலையிலே..
கருவண்டுகள் சுற்றிசுற்றி சிறகடித்து பறந்திருக்க..

அள்ளிக் கொள்ளும் கரங்கள் ஆவலோடு
எதிர் பார்த்திருக்க...

நாளும் உன் மலர்வை எதிர்பார்த்து..
நாணத்தால் அகம் சிவந்திருக்க...

மெல்ல இதழ் விரித்து..
மடல் திறந்து...

உனதுள்ளம் மலர்ந்து..
தென்றலோடு மணம் கலந்து....

கபடமற்ற மலரே தாமரையே...நீ
மலர்ந்து மெளனம் கலைவதெப்போ...?
-----------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

நிஜங்களின் நினைவுகள்.





கண்ணெதிரே நின்றாய்..
கதைகள் பல சொன்னாய்...
முன்னம் ஒருபோதும் காணா..
உனதுள்ளம் தந்தாய்.

அடிவானம் சிவந்தது போல்..
அமைதியாய் நானும் உன்வசமாகினேன்..
பிடிவாதமாய்க் கேட்டாய்..
பதிலும் நானும் தந்தேன்.

தாய் முகம் கண்டு..
மொழி வராத குழந்தையாய்..
மனம் முழுதும் உன்முகம் கண்டு..
மனதால் தினம் பேசி, நினைவால் வாழுகிறேன்.

யார் யாருக்கோ எல்லாம்..
கவிதைகள் எழுதி குவிக்கிறாய்.
என் மனம் வேதனையடைக்கூடாதென்று..
எங்கோ ஒரு மூலையில் என்பெயரைத் தினிக்கிறாய்.

அங்கேயும் நான் நினைப்பதெல்லாம்
உன் கவிதை கண்ணூறு படாமல் இருக்கவாவது
என் பெயர் அதில் இடம் பெறட்டும்
அதிலாவது நான் வாழந்து கொண்ட திருப்தியில்.

மார்கழி வருகிறது என்றாலே
மனம் நிறைந்த ஆனந்தம்..
எப்போதோ பதித்த கால் தடங்கள்
பார்த்து மலர் தூவி மார்கழியை வரவேற்கின்றேன்.

சிந்தையிலே தென்றலாய் வந்தாய்..
தென்றலை காற்றலையாய் தந்தாய்.
கற்றது கை மண் அளவிருக்க
பற்றுவைத்து நீயும் என்னை ஊக்கிவித்தாய்..

சிகரமாய் என்னை நீயும் போற்றி
புகழ் பாட்டாய் பல போட்டு தினம்
உன் வசமாக்கி என் நினைவுகளை
உன் நினைவுகளாக மட்டும் வாழவைத்தாய்.

காலைக் கதிரொளி பட்டு
மலர் படிந்திருக்கும் பனி விலகியது போல்
உன் வரவு கண்டு என் கண்ணீர்த்
துளி காய்ந்து கவலை போய் மகிழ்வாய் நானிருப்பேன்.

அந்த இனிமை நிறைந்த
நிஜமான நினைவுகளால் பகல்
கதிரவன் நிழலாய் தொடர்ந்து வரும்
நிஜங்களில் நினைவுகளைச்சுமக்கிறேன்.




--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

முகவரி இல்லாத முகங்கள்.




அன்னையவள் கைபிடித்து
அடிமேல்அடி எடுத்துவைத்து
மெல்லப்பேசும் கிள்ளை மொழியில்
செல்லக்கதைகேட்க ஆசையாய் என்னைத்
தொட்டுத்தூக்கி உச்சிமுகந்த எத்தனை உறவுகள்

விட்டுப்பிரிந்த நாட்முதல் தேடுகிறேன்
முகவரி இல்லாத முகங்களை..

கல்விபயில கல்லூரி வாசலிலே
கவலைகள் மறந்து
சிட்டுக்குருவிகளாய் சிறகடித்து
பட்டதுன்பம் எதுவுமின்றி
பகல் இரவாய் பாடித்திரிந்து கூடி குதூகளித்த..

அந்த முகவரிகள் இல்லாத
அன்பான பள்ளித்தோழிகள்..முகங்கள் எங்கே..?

ஆலயத்திருவிழாவில்
அணிஅணியாய் கன்னியர்கள் நாம்
வீசப்படாத வலையாம், வாலிப வலையில்
விழுந்து சிக்கித்தவித்து தாவணியில் வலம் வர..
தவம் கிடந்து மனம் கசிந்த..

அந்த முகவரி தெரியாத முகங்கள்
இன்று எங்கெங்கோ எல்லாம் தேடுகிறேன்..

காலத்தின் வேதனைகளைச்சுமந்து..
கடல் கடந்து வேறு இடமாய்
கரை ஒதுங்கி
கண்கள் சந்தித்தவர்களெல்லாம்
நலம் கூறி விடைபெற்ற

அந்த நல்ல மனம் படைத்த
முகவரி இல்லாத முகங்களை தேடுகிறேன்.

இல்லத்தில் இருந்து இணையத்தில் வந்து
இதயத்தில் இடம் பிடித்து..
இன்னல்கள் வரும் போது
இறைவன் துணையாய் அருள் வாக்குத்தந்த

இந்த அன்பான உறவுகள் எம் முற்றத்து
முகவரி இல்லாத முகங்கள்.

இதுநாள் வரை
இப்படி நான் சிந்தித்ததில்லை...
இதை எழுத வைத்த உன்னை நான்
சந்தித்ததில்லை...இனிமேல் நானும்
மறந்துவிடப்போவதுமில்லை என்
எண்ணத்தில் நீயன்றி வேறெதுவுமில்லை...

நீயும் எனக்கு
முகவரி தெரியாத முகங்கள்.
( நிலாமுற்றம்)






--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

அதிகாலை மலர் அது.





அதிகாலை துயிலெழுந்து..
ஆலயமணி ஓசை காதில் கேட்டுக்கொண்டு..
விடிகாலைப் பொழுதின் விபரங்களறிய..

படியிறங்கி கால்பாதம் முற்றத்தை மிதிக்க..
பகல்ச்சூரியன் மெல்லக்கதிரொளி பரப்ப..
பறவைகள் கீச்..கீச் என்று இறகையடித்து கானமிசைக்க..

புதிதாய் நட்டுவச்ச மரங்கள் பொலிவாய் இருக்கின்றதா என்று பார்க்க..
புதினத்தாளும் வீடு நோக்கி வீசி எறிய, அதை எடுத்து
பக்குவமாய் பக்கம் மெல்லப்புரட்டிப் படிக்க.....

ஆரம்பமே வெட்டும், கொலையும், மனிதப்பலியும்..
ஆங்காங்கே படங்களோடு காட்சி தர..
அப்படியே மடிப்புக்குலையாதவாறு ஒரு ஓரமாய் தொப் என்று போட்டுவிட..

நச்சென்று ஓர் எறும்பு அதில் நசிபட..
திக் என்று என் மனசும் அதை ஞாபகப்படுத்த..
வாளியோடு தண்ணீர்எடுத்து, வாசல்தெளித்து, முற்றம் நனைத்து..

அரிசிமாக்கொண்டு அழகிய கோலம் போட்டு..
வரிசையாய் அணிவகுத்து அகம்மகிழ்ந்து ஓடும்..
எறும்புப் பட்டாளப்படையின் விருந்துண்ண வருகைகண்டு..

எதிரில் நானும் அதை ரசித்தபடி..
எத்தனை இரவுகள் காவல் காத்தாலும்..சோர்ந்துபோகாது..
என்னைக் கண்டவுடன் வாலை ஆட்டும் நன்றியுள்ள நாயாரை கட்டிவிட்டு...

இன்றாவது கோழிக்குஞ்சு முட்டையுடைத்து வந்ததா என்று பார்க்க..
சத்தமின்றி மெல்லக்கூட்டைத்திறந்து எட்டிப்பார்த்து..
ஒரு குஞ்சைக்கண்ட மகிழ்வில், ஓடிச்சென்று எல்லோரையும் கூட்டிவந்து...

மாறிமாறி முண்டியடித்துக்கொண்டு. பட்டுக்குஞ்சை..
இருகைகளாலும் பொத்திப்பிடித்து, தொட்டு மகிழ்ந்த..
இனிய அந்த நாட்கள் இனிவருமா...? அதுமட்டுமா...

அன்று பூத்த மலர்களை, மெல்ல ஆய்ந்து கூடையில் போட்டு..
அதிகாலை பிராத்தனைக்காக ஆலயதரிசனம் சென்று மலர்கள் கொடுத்து..
அம்மாவிற்கும் திருநீறு கையில் எடுத்துக்கொண்டு...

அன்றைய காலைப்பொழுதில், அதிகாலை மலராக நானும்
அனைவரோடும் அன்பாகப்பேசி, ஒன்றாக பாடசாலை சென்று
அதிகாலை மலர் நானாக மலர் போல மகிழந்திருந்தேன்..

பொன்னான அந் நாட்கள், இந்நாளில் நினைத்தாலும் வருமா அதுபோல..
பொல்லாத பிரச்சனையால், சொல்லியழுந்தாலும் தேறாது இந்தமனம்..
பொறுமையோடு பொறுத்திருக்கின்றேன். மீண்டும் முற்றம் மிதித்து கோலம் போட.

பட்டபாடும், அடைந்த மகிழ்வும் நாள்முழுக்க எழுதினாலும்..
யாருக்கும் புரியாது..அந்த மன நிலை.
யாருமே பக்கத்திலின்றி, பழசையெல்லாம் மனதில் போட்டு பதிவாக்கிறேன் ஏனோ இன்று.




--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி