
சோகங்கள் என்னோடு மட்டும்
ஏன் சோர்வின்றி நித்தமும்
வேறூன்றி திடமாய் இருக்கின்றது..?
நீர் இல்லா நிலத்தில்
விளையுமோ நற்பயிர்..?
நீர் ஊற்றி நான்
வளர்க்காத போதும்
கண்ணீர் ஊற்றால்..
தினம் கிளைவிட்டு
இடறின்றி துளிர்விட்டு
வளர்கின்றதே சோகம் எனும்
ஆல விருட்சம்..
போதும் போதும் சாமி
பட்ட துன்பம் போதும் சாமி..
இன்னல்களும் இடர்களும்
இல்லா வாழ்வொன்றைக் காண்பி
அலைகடல் கரைதொடமுன்
மனம் அலைகின்றதே
இடர் பட்ட இடமெல்லாம்.
தொடர் கதை இதுதானோ..?
குறையேதும் வைத்ததுண்டோ கூறு..?
குறைவில்லா உயிர்கள் வாழ.
நிறைவாக நினைத்ததை தந்து
உன் கடன் தீர்ப்போம்.
அடுத்தடுத்தாய் கடிதங்கள்
துயர் பல சுமந்து
கண்ணிர் துடைக்கும்
துலாநீர் பாரங்கள்.
ஏங்கித் தவிக்கும்
எம்முறவுகளின் கூக்குரல்கள்.
எங்கு சென்று தஞ்சம்மென
என்னாளும் தவிக்கும்
எண்ணற்ற மக்கள்..
காலங்கள் எண்ணி எண்ணி
கன்னிகளும் கரை தேடா
மனக் கனவுகளில் மணக்கோலங்கள்
நாளைய உலகில்
நானும் பட்டதாரி என
நாளெல்லாம் கனவு கண்டு
நடுங்கி ஒடுங்கி நடுவீதியில் விசாரணையில்
நாதியற்று கிடக்கும் மாணவர்கள்
பட்ட துன்பம் போதும் சாமி..
இன்னல்களும் இடர்களும்
இல்லா வாழ்வொன்றைக் காண்பிதாயே..
வேலை செய்தால் வரும் 50 ரூபா
வேண்டியதெல்லாம் வேண்டாவிட்டாலும்
வேளை ஒரு வேளை உணவு உண்ண
வேண்டுமய்யா ஒரு நிரந்தர வேளை..
கையில் பொதிகளும்
பையில் பணமும்
பக்குவமாய் செயல்பட
பயணித்திடுவார் அடுத்தநகர்.
மனதில் திடமும்
கையில் பலமும்
இருப்பவன் எண்ணிட வழியில்லையே
இருப்வரை விட்டு விலத்தி வாழ..
பட்ட துன்பம் போதும் சாமி..
இன்னல்களும் இடர்களும்
இல்லா வாழ்வொன்றைக் காண்பி தாயே.
தமிழ் என்ன முஸ்லிம் என்ன
சிங்களம் என்ன பறங்கி என்ன
சித்திரவதை பட்டு சிதறுண்டு வாழ்வது
அப்பாவி எனும் மக்கள் தானே..
பட்ட துன்பம் போதும் சாமி..
இன்னல்களும் இடர்களும்
இல்லா வாழ்வொன்றைக் காண்பி தாயே.
அண்டை நாடொன்றில்
அழகாய் நான் வாழ்கின்றேன் இருந்தும்
அவமானம் எனக்கு சொந்த
நாடென்று இதுநாள் வரை
இல்லாத போதும்..
அகதி என்ற பட்டம்
ஆயுள் வரை அடுத்தவன்
எனக்கிட்ட நாமம்.
பட்ட துன்பம் போதும் சாமி..
இன்னல்களும் இடர்களும்
இல்லா வாழ்வொன்றைக் காண்பி சாமி.
-------------------------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி